வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இளம் குடும்ப பெண் ஒருவரை தீயிட்டு எரித்துள்ளனர்.
இதில் கறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் 09 பேர் வெட்டுக்காயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (23.07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
அதன் பின்னர் வாள்வெட்டு குழுவினர் வீட்டுக்குள்ளிருந்த பெண்கள் உட்பட பலரை தாக்கியதோடு, வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் வீட்டில் இருந்த 09 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.