13ஆவது திருத்தத்திற்கு பதிலாக 22 ஆவது திருத்தத்தை கொண்டுவர திட்டம்!

அரசியலமைப்பில் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் 22வது அரசியலமைப்பு  திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  

கட்சி அலுவலகத்தில் இன்று (24.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் வேளையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பொலிஸ் அதிகாரங்களை பின்னர் அமுல்படுத்துவதற்கும் ஏனைய அனைத்தையும் உடனடியாக அமுல்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் இணக்கம் காண ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பின்னணியில், இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாரிய ஆபத்தில் உள்ளது என்பதை  எச்சரிக்க வேண்டும். 

பொலிஸ் அதிகாரங்கள் அரசியலமைப்பில் உள்ளதால்தான் ஜனாதிபதி அவ்வப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அழைத்து பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் வாக்குறுதிகளை வழங்குகின்றார். 

அரசியலமைப்பில் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் சட்டத்தரணிகள் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்டு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இதை அடுத்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிப்போம். தாய்நாட்டை பிரிவினைப்பாதையில் இட்டுச் செல்வதா என்ற தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  அவர்களின் முடிவு என்ன என்பதை நாட்டு மக்கள் பார்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version