வவுனியாவில் இடம்பெற்ற கொடூர சம்பவம் குறித்து சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிக்க முடியாது எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் கடும் தொனியில் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ”வவுனியாவில் என்ன நடக்கின்றது. தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக ஒருவர் மரணித்ததுடன் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களும் எரிகாயங்களுக்குள்ளாகியும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மார்ச் மாதம் 07ம் திகதி நான்கு பேர் படுகொலையா அல்லது தற்கொலையா என்று தெரியாத நிலையில் இன்று வரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கூட தெரியாத சூழலில்தான் மீண்டும் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயம்.
வவுனியாவை பொறுத்தவரை நம்பிக்கையுடன் வந்து போக கூடிய மக்களும், நம்பிக்கையுடன் வாழக்கூடிய மக்களுக்கும் இச்சம்பவம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான சம்பவங்களிற்கு பொலிஸார் தமிழர்கள் என்ற காரணத்தினால் அமைதி காக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இதே நிலைமை தென்னிலங்கையில் நடைபெற்றால் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பார்கள்.
தமிழர்கள் எந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களாக தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இந்த நேரத்தில் பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சரிடம் வெளிப்படையான ஒரு கருத்தை கேட்க விரும்புகிறேன்.
அமைதியான இடமாக இருந்த வவுனியா தற்போது மிக மோசமான வன்முறையை கொண்ட இடமாக மாறியுள்ளது. மக்கள் அச்சப்படுகன்றனர். பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்ல அச்சப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயத்திலும் பொலிஸார் மெத்தன போக்கை காட்டக்கூடாது என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு இனியும் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
26ம் திகதி ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம். அப்போது இவ்விடயத்தினை மிக முக்கிய பிரச்சினையாக விவாதிப்பேன். இல்லாவிடின் தமிழர்களிற்கு எது நடந்தாலும் பரவாயில்லை என எண்ணுகின்ற பொலிஸார் அல்லது அரசாங்கம் இதைத்தான் செய்யப்போகின்றதா என நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.