காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை மற்றும் விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நீதி கோரி இன்று (28.07) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்திற்கு வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உணவகங்கள் மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மரக்கறி மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தையும் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலைகளுக்கு குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்திருந்ததுடன் தூர சேவை பேருந்துகள் மற்றும் சில உள்ளூர் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருந்தது.
வவுனியா வர்த்தகர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் அனைத்தும் பகிரங்கமாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடாத நிலையில் தமது சங்கத்தின் தலைவர், செயலாளரின் செயற்பாடுகளை பின்பற்றி ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை என்பதுடன் பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமக்கு வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் உரிய முறையில் கோரிக்கை விடவில்லை என மன்னார் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதுடன், தனியார் போக்குவரத்துச் சேவைகளும் அங்கு இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.