முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு வைத்தியசாலை உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னரே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வைத்தியசாலை உதவியாளர் முல்லேரியா பொலிஸ் அதிகாரிகளால் நேற்றிரவு (28.07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட 48 வயதான நோயாளி ஜூலை மாதம் 20ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளியை கட்டுப்படுத்த முற்பட்டபோது வைத்தியசாலை உதவியாளர்களினால் நோயாளி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நோயாளியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று வைத்தியசாலை உதவியாளர்கள் இன்று (28.07) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்று வைத்தியசாலை உதவியாளர்களையும் சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவசர விசாரணை நடத்தப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது.