இலங்கையின் முழு சுகாதாரத் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை (03.08) அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு தரக்குறைவான மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும், இலங்கையின் ஒட்டுமொத்த சுகாதார துறையின் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து இலங்கையர்களின் நலனுக்காகவே இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்த சுகாதார தொழிற்சங்க தலைவர்கள், இதற்காக பொதுமக்களின் ஆதரவைப் பெறுவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், நோயாளர்களின் உயிரைப் பாதுகாக்கவும், நாட்டில் நிலவும் சுகாதார நெருக்கடிக்கான பதில்களை வழங்கவும், தேசிய இயக்கத்தை உருவாக்குவதற்காக, சுகாதார நிபுணர்கள் புதன்கிழமை (02.08) கொழும்பில் ஒன்றுகூடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை மற்றும் அவசரகால கொள்வனவு முறைமையைப் பயன்படுத்தி நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சுகாதார நிபுணர்களின் குரல்களை நசுக்குவதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் எடுத்த தீர்மானத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றும் சுகாதார தொழிற்சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக மீளப் பெறாவிட்டால் அடையாள வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்தப் போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.