விளையாட்டு சங்கங்கள் அமைச்சின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

இலங்கையின் விளையாட்டு சங்கங்கள் விளையாட்டு துறை அமைச்சின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், இது கட்டாயமாக்காப்பட்டுள்ளது எனவும் விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார். தான் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் அமைச்சரவை அனுமதி மூலம் புதிய விதிமுறைகள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சங்கங்களின் யாப்பில் உள்ளடக்கப்படவேண்டுமெனவும் மீறுவது சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு எனவும் ரொஷான் ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார். குறித்த சட்டத்துக்கு கிரிக்கெட், காற்பந்து. மெய்வல்லுனர், பட்மின்டன் சங்கங்கள் எதிராக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளன. அவை தவிர்த்து ஏனைய சங்கங்கள் அந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் விளையாட்டு அமைச்சினால் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வெளியிட்ட சட்டத்தை கடைபிடிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விதிமுறைகள் தாய் சங்கம் உட்பட, மாகாண, மாவட்ட, பிரேதச சங்கங்கள் வரை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டுமெனவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நேற்று(02.08) விளையாட்டு துறை அமைச்சில் விளையாட்டு சங்கங்கள் உடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பை விளையாட்டு துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

விளையாட்டு சங்கங்கள் தமக்கான நிதியினை தாமே தேடிக்கொள்ள வேண்டுமெனவும், அரசாங்கத்தினால் பணம் வழங்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், அதற்கான வேலைத்திட்டங்களை உரிய சங்கங்கள் எடுக்க வேண்டுமெனவும், சங்கங்களின் வினைத்திறனற்ற செயற்பாட்டின் காரணமாகவே செலவினங்கள் அதிகமாக ஏற்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சங்கங்கள் இறுதி நேரத்தில் ஏற்பாடுகளை செய்வதாகவும், அதன் காரணமாக விசா நடவடிக்கைளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், மூன்று மடங்கு அதிக விலைக்கு விமான பயணச்சீட்டுகளை வாங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இவற்றை கருத்திற் கொண்டு வினைத்திறனாக செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு சில சங்கங்கள் சரியாக செயற்படுவதில்லை எனவும், வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களே விளையாட்டு துறை அமைச்சுக்கு ஏனைய இடங்களுக்கும் அலைந்து திரிவதாகவும் குற்றம் சுமத்தினார்.

போட்டிகளுக்காக அணிகள் தெரிவு செய்யப்பட்டு அனுமதி பெறுவதற்கு சங்கங்கள் குறைந்தது 7 நாட்களுக்கு முன்னர் விளையாட்டு துறை அமைச்சிடம் கையளிக்கப்படவேண்டும் எனவும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை இறுக்கமாக கடைப்பிடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு சங்கங்களில் ஊதியம் பெறுபவர்கள் பொறுப்புகளில் இருக்க முடியாது எனவும் ஒரு சங்கத்துக்கு மேலாக இன்னுமொரு சங்கத்தில் பொறுப்பில் இருக்க முடியாது எனவும் தெரிவித்த அமைச்சர் வாக்களிப்புகளில் ஈடுபடமுடியாது எனவும் அவ்வாறு செய்தால் அந்த வாக்குகள் நிராகரிக்கப்படவேண்டும் எனவும், அந்த செயற்பாடானது சட்டவிரோதமானது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். பட்மின்டன் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவர் அவ்வாறு செயற்பட்டதாகவும், இருப்பினும் பட்மின்டன் சேவையை கருத்திற் கொண்டு விளையாட்டு துறை அமைச்சினால் குறித்த சங்கத்துக்கு தடை விதிக்கவில்லை எனவும், அவற்றை திருத்திக் கொள்ள காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இடம் வழங்கப்படாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சங்கங்களுக்கான காலம் 3 வருடங்கள் மற்றும் 2 வருடங்கள் என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பதவிக்காலம் 2 வருடங்கள். சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தின் பதவிக்காலம் 4 வருடங்கள். அதன் அடிப்படையில் அந்த சங்கங்களின் காலம் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. சங்கங்களின் செயற்பாடுகள் சிறப்பாக செல்லும் பட்சத்தில் அவை தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன எனவும் அமைச்சர் ரொஷான் கூறியுள்ளார்.

விளையாட்டு சங்கங்கள் அமைச்சின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

Social Share

Leave a Reply