வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என சந்தேகிக்கும் நபர் நேற்று (02.08) குற்றபுலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டனர்.
இச்சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த பாத்திமா சமீமா என்ற 21 வயது இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த இறந்த பெண்ணின் கணவனான ச.சுகந்தன் சிகிச்சை பலனின்றி கடந்த 26ம் திகதி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என சந்தேகிக்கும் நபர் நேற்று (02.08) குற்றபுலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதான சந்தேகநபரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதுடன் விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் அவர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.