கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளோம்!

கடுமையான உணவுப் பாதுகாப்பைின்மையை நாம் இப்போதும் அனுபவிக்கிறோம் எனவும், இதற்கான தீர்வை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேட வேண்டும் எனவும் அமைச்சர் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார்.

புதிய கிராமம் – புதிய நாடு” என்ற தொனிப்பொருளில், தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னேற்ற மீளாய்விற்கான விசேட கலந்துரையாடல் கடந்த (04.08) ஆம் திகி மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான ஹாபீஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண ஆளுநர் , இராஜாங்க அமைச்சர்களான ஜனக வக்கும்வெற, அசோக் பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் சுறேன் வட்டகொட, உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் நஸீர், ”எம்மிடம் எது தான் இல்லை. நிலம், நீர் என எல்லா வளங்களும், மீன்பிடி, விவசாயம், சீவனோபாயம், கால்நடை, நன்னீர் மீன்வளர்ப்பு அனைத்திலும் அறிவும் அனுபவமும் உள்ள மக்கள் இவ்வளவும் இருந்தும் ஏன் எம்மால் எமது திட்டங்களில் வெற்றிகாண முடியாமல் இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.

நான் விவசாய அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே காட்சிப்படுத்தப்படுகின்ற தரவுகளையும் வரைபடங்களையும் அரசாங்க அதிபர் இன்றும் முன்வைத்தார். இது கள நிலவரத்தைப் பிரதிபலிக்கிறதா ? மக்களிடம் கேட்டுப் பாருங்கள். களத்தில் அடையப் பெற்றவையாக இவை இல்லை. ஏன் நாங்கள் மீண்டும் மீண்டும் இதே விதமாகச் செயற்படுகிறோம் ? நிதியளிப்பவர்களையோ அரசாங்கத்தையோ திருப்திப்படுத்த மட்டுமே செயற்பாடுகள் காட்டப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டிச் சென்று நாட்டின் உணவுப் பாதுகாப்பில் 50 வீதத்துக்கு கிழக்கு மாகாணம் பங்களிப்புச் செலுத்த முடியும் என்பதோடு நாட்டின் ஏற்றுமதி வருானத்தை அதிகரிப்பதிலும் எம்மால் பங்களிப்புச் செலுத்த முடியும்.

முறையான தொழில்நுட்பங்களைப் பாவிக்க முடிந்தால் நாட்டின் 75 வீதமான அரிசித் தேவையை கிழக்கு மாகாணம் வழங்க முடியும். உலகின் தொழில்நுட்ப முறைகள் இயற்கையை அடிப்படையாகக் கொண்டவையாக மாறி வருகின்றன. 2017 இல் இந்திய மக்கள் இதனை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். 650,000 விவசாயிகளில் இருந்து இவர்களின் தொகை அடுத்த வருடம் ஒரு மில்லியனாக அதிகரிக்கவிருக்கிறது. இப்படித்தான் நாடுகள் முன்னேறி வருகின்றன. ஏன் எம்மால் முடியாது ? எல்லா அதிகாரிகளும் இரவு பகலாக உழைத்தால் எம்மாலும் முடியும்.

சுதந்திரம் பெற்றதிலிருந்தே இலங்கை நலன்புரிச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. உலக யுத்தத்தின் போது உணவு மானிய முறை அமுலில் இருந்தது. பிற்பட்ட காலங்களில் இது சமுர்தி,ஜனசவிய எனப் பரிணாமமடைந்து தற்போது அஸ்வெசும திட்டம் அமுலாகி வருகின்றது. இந்த உணவு மானியத் திட்டங்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் வருமானத்துக்கான பங்களிப்பு என்ற நோக்கங்களில் நடைறைப்படுத்தப்படுகின்றன.

ஆனால் எமது திட்டங்களும் இந்த இரு நோக்கங்களையும் அடைந்துள்ளனவா ? மக்களின் சீவனோபாயம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தி நாடு தன்னிறைவடைந்து ஏற்றுமதி செய்யக் கூடிய அளவில் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யக் கூடியவர்களாக மாற்றுவதே இந்தத் திட்டங்களின் தேவையாகும். ஆனால் இதனை நாங்கள் ஒருபோதும் அடைந்ததில்லை. உண்மையில் இந்த விடயத்தில் நாங்கள் தோற்றுப் போயிருக்கிறோம். இதற்கான முதலாவது காரணம் நிர்வாகச் சீர்கேடாகும். இது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் பாதிப்புச் செலுத்தி வருகிறது. அடுத்ததாக திட்டங்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதால் வரும் பாதிப்பு.

கடந்த வருடம் நிலவிய எதற்கும் வரிசையில் நிற்கும் கலாச்சாரத்திலிருந்து மாறி தற்போது நாங்கள் முன்னேறி வருகிறோம். இதற்காக நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் எங்களால் இந்த முன்னேற்றத்தைத் தொடர முடியுமா ? கடுமையான உணவுப் பாதுகாப்பைின்மையை நாம் இப்போதும் அனுபவிக்கிறோம். இங்கிருக்கும் அனைவரும் ஒன்றாயிணைந்து இதற்கான தீர்வைத் தேட வேண்டும் எனவும் அமைச்சர் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா விரிவாக விளக்கமளித்தார். காணி உறுதிகள், வீட்டுத் திட்டம் அமைப்பதற்கான காசோலைகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பஸ் பாஸ் உள்ளிட்டவை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version