மின் கட்டண உயர்வு தொடர்பான ஊடகச் செய்திகளை மறுத்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சாரத்தின் விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை (CEB) ஆண்டு முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது கிடைக்கக்கூடிய மின் உற்பத்தி நிலையங்களின் முழு கொள்ளளவும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று (06.08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் விபரங்களையும் அமைச்சர் வழங்கினார்.
திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் இன்றி தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் விவசாயத்திற்குஅதிகபட்ச நீரை வழங்குவது தொடர்பான தெரிவுகள் இன்று (07.08) அமைச்சரவையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
அடுத்த 12 மாதங்களுக்கான மின் உற்பத்தி, விவசாயத்திற்கான நீர் வெளியீடு, நீர்மின் திறன், அனல் மின்சாரம் உள்ளிட்டவை தொடர்பான விபரங்கள் பகிரப்பட்டு விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.