யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (08.08) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக அரச தகவல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் சிறுவர் சார்ந்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. ஆசிரியர்களிற்கான உளவள பயிற்சி, திறன் பயிற்சிகள் வழங்கவேண்டிய தேவையுள்ளது. இதனை எதிர்காலத்தில் அதிபர்கள் கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் அதிகரித்த போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம், பாடசாலை பேரூந்து சேவையினை சீர்படுத்துதலினை சாலை முகாமையாளருக்கு தெரியப்படுத்தல், மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுப்படுத்தியதன் நற்பயன்கள் மற்றும் பிள்ளைகள் அடைந்துள்ள வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.
மேலும் பாடசாலை அதிபர்கள் 2023 க.பொ.த உயர்தர வகுப்பு பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடைபெறுவதால் பாடசாலை மாணவர்களின் வரவின்மை காணப்படுவதாகவும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களின் கற்பித்தல் செயற்பாட்டினை நிறுத்தியமையினால் பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தில் மேம்பாடு காணப்படுவதாகவும், காலை பாடசாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் தனியார் கல்வி நிலைய செயற்பாடு இடம்பெறுவதனை கட்டுப்படுத்துமாறு கோரியதுடன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலைய செயற்பாட்டினை நிறுத்தியமையினை தொடர்ந்து செயல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் அச்சுவேலி சான்றுபடுத்தல் இல்ல செயற்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் வட மாகாண ஆணையாளர், கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.