இராவணன் தமிழ் மன்னனா அல்லது சிங்கள மன்னனா என்பதை ஆய்வு செய்வது பயனற்றது எனவும், அவர் இலங்கையை ஆட்சி செய்த சிறந்த அரசர்களில் ஒருவர் என்பதே உண்மை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
இராவணன் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண நேற்று (11.08) கொண்டுவந்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மகாவசம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணவனின் யுகத்தை வால்மீகி இராமாயணத்தில் வெளிக்கொண்டு வந்ததையிட்டு வால்மீகிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இராவணன் வரலாற்று கதைகளை வெறும் கற்பனை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல விடயங்கள் உண்மை தன்மையாகவே காணப்படுகிறது. இராவணன் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு சிறந்த மாவட்டமாக மாத்தளையை தெரிவு செய்ய வேண்டும்.
இராவணன் 10 பிரதேசங்களை ஆண்டதாகவும், 10 கலைகளில் சிறந்து விளங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆகையினாலேயே அவர் 10 தலையுடைய இராவணன் எனப்போற்றப்பட்டார்.
அவர் தமிழ் மன்னரா, சிங்கள மன்னரா என்று வாதிடுவது பயனற்றது. அவர் சிறந்த அரசர்களில் ஒருவர் என்பதே உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராவணன் சிங்கள மன்னன் எனவும், அவர் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர் என்றும் இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என சரத் வீரசேகர கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த விடயம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இராமாயணத்தை ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.