மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி – மனோ கணேசன்!

தமிழரின் தலையை கொய்து வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தை திருடர்கள், தரகு பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்த குடும்பத்துடனேயே மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டு தரகு பணம் பெரும் பிரச்சினையால், ராஜபக்சர்களுடன் நடத்திய குடும்பம் பிரிந்ததோ என்ற கேள்வியும் எப்போதும் இந்நாட்டு மக்கள் மனங்களில் இருக்கும் சங்கதி.

எல்லாவற்றையும் மிஞ்சிய உலகமகா கேலிகூத்து என்னெவென்றால் உலகத்துக்கு அஹிம்சையை போதித்த போதிசத்துவர் பெயரில் இவர் தமிழர்களின் தலையை வெட்டுவாராம். இவரை போன்றவர்களிடமிருந்து பெளத்தை போதிசத்துவர்தான் மீண்டும் பிறந்து வந்து காப்பாற்ற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது;

முன்னையை ராஜபக்ச ஆட்சி காலத்தில், ஊடகவியலாளர்களின் கால்களை உடைப்பேன் என்றும் இவர் சொன்னார். அப்புறம் அரச ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்துக்கு சென்று தன் தலையையே உடைத்துக்கொண்டு வந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மக்களாலேயே அரசியலில் இருந்து விரட்டப்பட்டார்.

நாட்டில், விகாரைகளையோ, கோவில்களையோ, பள்ளிகளையோ, தேவாலயங்களையோ கட்டுவிப்பதில், பூஜைகளை செய்வதில் இடைஞ்சல்கள் ஏற்பட்டால், அதை சட்டப்படி அணுக வேண்டும். அந்த சட்டமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

தமிழர் தலைகளை கொய்து வருவேன் என்ற இப்படி தலை வெட்டும் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. இவரை பாரதூரமானவராக எடுக்க தேவையில்லை. ஆனால், இவரது கருத்து, பாரதூரமானது. நாட்டில் இன மத குரோதத்தை உருவாக்கும் கருத்து. இவருக்கு எதிராக சட்டம் பாய வேண்டும். அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுபற்றி தங்கள் தலைவர்களான ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் புகார் செய்ய வேண்டும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version