வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் விதித்துள்ள கடுமையான வரிக் கொள்கைகள் மற்றும் நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூவர் செய்த வேலையை தற்போது ஒருவர் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது, இந்நிலை தொடர்ந்தால், வெளிநாடுகளிலிருந்து வைத்தியர்களை அழைத்து வருவதை தவிர வேறு வழி இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர் நாட்டை விட்டு வெளியேறியதும், வைத்தியசாலை எதிர்நோக்கும் நெருக்கடிக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன அதனை எவ்வாறு செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருது தெரிவித்த அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கிளையின் தலைவர் உஜித் பத்மேந்திரா தெரிவிக்கையில்,
தற்போது சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதும், தீவிர சிகிச்சைப் பிரிவைப் பராமரிப்பதும் பாரிய சவாலாக உள்ளது எனவும், ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலை பல பிரதேசங்களில் பல நோயாளிகளுக்குச் சேவைகளை வழங்கி வருவைத்தால், அமைச்சு உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.