தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேர்தல் முறை மாநாடு

பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால், தேர்தல் முறைமை மற்றும் சீர்திருத்தம் தொடர்பில், கொழும்பில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் பங்குப்பற்றிய அனைத்து கட்சிகளினாலும், ஒரு பொது நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள், அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீதரன், சித்தார்தன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், , வேலு குமார், உதயகுமார் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் சட்ட செயலாளர் ருஷ்டி, இலங்கை தொழிலார் காங்கிரஸ் சார்பாக மதியுகராஜா, ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பாக தவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1)பலமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில், பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள், அனைத்து மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளினதும் மற்றும் அனைத்து சமூக குழுவினர்களினதும் பிரதிநிதித்துவங்களுக்கு வழிவகுக்கும் வண்ணம், முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் பாராளுமன்றமும், மாகாணசபைகளும், உள்ளூராட்சி மன்றங்களும் தமது பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலை படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் செயற்பட முடியும்.

2)பாராளுமன்றத்தினதும், மாகாணசபைகளினதும், உள்ளூராட்சி மன்றங்களதும் கட்சி அங்கத்துவ எண்ணிக்கை தொகுப்பு, வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்த வாக்கு ஆணையை அதிகபட்சமாக பிரதிபலிக்க வேண்டும். வெற்றி பெறும் கட்சி, அளிக்கப்பட்ட வாக்குகளில் தாம் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தை விட, அதிக விகிதாசார எண்ணிக்கையில் ஆசனங்களை எடுத்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். வாக்கு விகிதாசாரமும், சபை அங்கத்தவர் எண்ணிக்கை விகிதாசாரமும், சாத்தியமானளவில் ஒன்றை ஒன்று ஒத்து போக வேண்டும். இந்நிலைமையை விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

3)உள்ளூராட்சி, மாகாணசபைகள், பாராளுமன்றம் ஆகிய மூன்று மட்ட தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவினால் ஒரே வேளையில் தயார் செய்யப்பட்டு, ஒரே சட்டமூலத்தின் மூலம் அரசியலமைப்பு திருத்தமாக கொண்டு வரப்பட வேண்டும்.

4)ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்களை, முன்னுரிமை கொடுத்து, விகிதாசார முறையின் கீழ் நடத்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்.

ஆகிய விடயங்களில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட முக்கிய விடயங்கள் ஆகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version