நட்பு வட்டார முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும்!

சர்வதேச ஆய்வுகளின் பிரகாரம்,நம் நாட்டில் 29 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும்,தாய்மார்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கிடைக்க வேண்டிய திரிபோஷா நிவாரணம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாகலகமுவ ஸ்ரீ சுமணசாராபிதான தேரருக்கு சங்கநாயகப் பதவிக்கான பட்டப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (20.08) இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தேசிய பாதுகாப்பு என்று குறிப்பிடப்படுவதால், அது பாதுகாப்புப் படையினரைப் பற்றியது என்று பலர் கருதுவதாகவும், தேசிய பாதுகாப்பின் பரந்த வரையறையின்படி, இது மத,கலாச்சார, பொருளாதார,சமூக,சிவில்,அரசியல் பாதுகாப்பு,மற்றும் கல்வியைப் பாதுகாத்தல், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் பிரகாரம் நோக்கும் போது எமது நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவருவதற்கு அனைவருமான பொறுப்புக்கூற வேண்டும் என்றும், தற்போதுள்ள அரசியல் கலாச்சாரத்தில் அதைச் செய்ய முடியாது என்றும்,இன்று இந்நாட்டில் பதவிகள் பட்டங்களை தேடிப்போகும் நட்புவட்டார அரசியல் கலாசாரம் செயற்பட்டு வருவதாகவும்,இந்நிலை மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்கள் துன்பப்படும் வேளையில் நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் நட்பு வட்டார முதலாளித்துவத்தின் ஊடாக வீணடிக்கப்படும் ஒரு சகாப்தம் நிலவிவருவதாகவும்,கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்யாமல், ஊழலும், மோசடியும்,திருட்டும் இன்றும் நாட்டில் நட்பு வட்டார முதலாளித்துவ நண்பர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது ஒரு தேசியக் குற்றமும் தேசிய துயருமாகும் எனக் கூறிய அவர், இந்த கொடூர திருட்டை அனைவரும் உடனடியாக நிறுத்தி தேசிய இணக்கப்பாட்டுடன் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும்,இன்று,சலுகைகள் மற்றும் அமைச்சர் பதவிகளை எதிர்கொண்டு தனது சுயமரியாதையையும்,தனது கொள்கைகளையும்,நாட்டையும் காட்டிக் கொடுக்கும் சிலர் இருப்பதாகவும், இந்நிலை தொடருமானால் நாட்டின் அழிவை தடுக்க முடியாது போகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பலமுறை பிரதமர் பதவியை ஏற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், 52 நாள் ஆட்சியில் 71 தடவை பிரதமராக பதவியேற்க கோரிக்கை விடுத்தனர் என்றும்,நாட்டை வக்குரோத்தாக்கிய ஜனாதிபதி கூட பொறுப்பேற்குமாறு கோரியதாகவும், மனசாட்சிக்கு உடன்படாததால் பதவிகளை ஏற்கவில்லை என்றும்,மக்கள் ஆணை இல்லாமல் நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version