அரசாங்கம் பற்றி முடிவெடிக்கும் நேரம் வந்துவிட்டது!

அரசாங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்களுடன் எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு இன்று(21.08) நடத்திய கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர்,சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்நாட்டின் சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாகவும்,தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் மற்றும் மருத்துவ கவுன்சில் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சட்டங்களில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாம் நம்பினாலும், இந்தச் சட்டங்களை முற்றாக நீக்குவது என்பது மருந்து மாபியாவுக்கு இடம் கொடுப்பதும்,பல்வேறு பல்தேசிய மருந்துக் கம்பெனிகள் தலைமையிலான சர்வதேச நிறுவனங்களை நாட்டின் மருந்துக் கொள்கையை கையாள அனுமதிப்பதும்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நேரத்தில்,சுகாதாரத் துறை ஒரு பேரழிவாக மாறியுள்ளதாகவும்,நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களால் புத்திசாலிகள் வெளியேற்றம் போலவே மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளனர் எனக் கூறிய அவர், உயர்தரத்திலான மருந்துகளை நியாயமான மற்றும் மலிவு விலையில் வழங்குவதே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. என்றாலும், தற்போதைய அரசாங்கம் கட்டளைச்சட்டங்கள்,ஆணைகளை பயன்படுத்தி கொள்முதல் முறைகளை புறக்கணித்து, அமைச்சரினதும், செயலாளரினதும் ஆட்சியாளர்களினதும் விருப்பத்திற்கு ஏற்ப மருந்துத் தொழிலில் ஒரு நட்புவட்டார முதலாளித்துவத்தை உருவாக்கி, தனது நண்பர்களுக்கு மருந்துப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதியளித்து சந்தையில் வெளியிடுவதற்கும் அனுமதிக்கிறது. இதன் மூலம் தரம் தாழ்ந்த மருந்து மாபியாவின் செயற்பாட்டை அனுமதித்ததாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இயங்கிவரும் மருந்துப்பொருள் மாபியாவை நிறுத்த வேண்டும் என்றும்,இந்த ஊழல் முறைகளை தோற்கடிக்க வேண்டும் என்றும்,இது பொதுச் சொத்துக்களையும்,மக்களின் பணத்தையும் கொள்ளையடிக்கும் செயலாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துகளை ஒரே நேரத்தில் இறக்குமதி செய்து மக்களின் பணத்தை வீணடிக்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நாட்டிற்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாலான வெளிப்படையான,செயல்திறன் வாய்ந்த தேசியக் கொள்கை தேவை என வலியுறுத்திய அவர், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் செல்வாக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்றும்,இதற்காக நாடாளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள முடியுமான அதிகபட்ச போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாட்டிற்கு சாதகமான நல்லது பயக்கும் எந்த ஒரு நல்ல விடயத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரித்தாலும் பதவிகளை தேடி அதை செய்வதில்லை என்றும்,மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் செல்லும் அரசாங்கத்துடன் கைகோர்க்கத் தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முறையான கணக்கெடுப்பு இல்லாமல் செயல்படுத்தப்பட்டதால் அஸ்வெசும திட்டம் தோல்வியடைந்ததாகவும், இதே முறையை சுகாதாரத்துறைக்கும் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரத்துறையையும் அழிக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும்,அடுத்த நாடாளுமன்ற அமர்வில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாமானியர்களின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் செல்லும் கொள்கைகளுக்காக முன் நிற்பதா என்பதை முடிவு செய்ய வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இதன்போது, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை சட்டம் மற்றும் இலங்கை மருத்துவ கவுன்சில் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பிற்கு Sri Lanka Association of Clinical pharmacology and Therapeutics , Sri Lanka Medical Association என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version