இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், நாளொன்றுக்கு சுமார் 166-170 பேர் மாரடைப்புக்கு ஆளாவதாகவும், தற்போதைய தரவுகள் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண பரிசோதனைகளுக்கு வருபவர்கள் மத்தியிலும் இந்த நோயின் தாக்கம் இருப்பது தரவுகளில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதய நோயாளிகளின் அதிகரிப்புக்கு உணவுப் பழக்கத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணமாக இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நமது வாழ்க்கை முறை மாரடைப்புக்கு பெரும் காரணமாக அமைவதக்கவும், வாழ்க்கை முறையின் மாற்றத்தால், குறிப்பாக நாம் உண்ணும் உணவில் ஏற்படும் மாற்றங்கள், மது பழக்க வழக்கங்கள் என்பன இதயம் தொடர்பான சிக்கல்களுக்கு பெரும் பங்காற்றுகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாம் நாளாந்தம் உட்கொள்ளும் சீனியின் அளவு மிக முக்கியமான ஒரு விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன், இலங்கையில் ஒருவர் ஒரு வருடத்திற்குள் சுமார் 30 கிலோ சர்க்கரையை உட்கொள்வதாகவும், உணவுகளில் அதிக எண்ணெயைப் பயன்படுத்துவதாகவும், அவற்றுள் பெரும்பாலான உணவுகள் அதிக கார்போஹைட்ரேட் கொண்டிருப்பதால் இதய நோய்களுக்கு காரணமாக அமைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.