யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு ஊசி மருந்து செலுத்துவதற்காக கானுலா பொருத்தும்போது ஏற்பட்ட பாதிப்பினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது கானுலா செலுத்தும்போது அருகில் இருந்த நாடி சேதமடைந்து இரத்த ஓட்டம் தடை பட்டிருக்கலாம் எனவும் இதன்காரணமாக கையின் மணிக்கட்டுடனான பகுதி செயலிழந்திருக்கலாம் எனவும் வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுமியின் கை அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள யாழ், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ”இப்படியொரு சம்பவம் நடந்ததை உறுதி செய்ததோடு முதல் கட்ட உரிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இரு வைத்திய நிபுணர்கள் தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.