ஹோமாகம பகுதியில் இனங்காணப்பட்டுள்ள மர்மப் பொருள்!

ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சுற்றாடல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அண்மையில் தீப்பிடித்த கட்டுவான தொழிற்சாலை பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரசாயன திரவம் நீரில் கலந்துள்ளதனால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இது வழமைக்கு மாறான நிகழ்வு எனவும், அவை உடலில் பட்டால் அரிப்பு ஏற்படுவதாகவும், இதனை பார்க்க வந்த ஒருவர் வீட்டிற்கு சென்று வாந்தி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதுதவிர, இவை அப்பகுதியின் குடிநீரில் கலந்தால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த இடத்தில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயன திரவம் நீரில் கலந்து இவை உருவாகியுள்ளதாக சந்தேகிப்பதாகவும், இந்த திரவம் வெளியேறும் இடத்தை முதலில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version