ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தாம் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக உள்ளதாக கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்ய முடியவில்லை எனின் நாம் மதங்களை பின்பற்றுவதால் உள்ள பயன் என்ன எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று (08.09) கொழும்பில் இடம்பெற்ற ஆலய வழிபாடொன்றின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் தெளிவாக தெரியவில்லை எனவும், புதிதாய், புதிராய், ஒவ்வொரு விடயங்கள் வெளிவருவதால், மர்மமாக இருப்பதாகவும் தெரிவித்துளளார்.
சம்பவம் குறித்த வெளிப்பாடுகளில் சிலரது பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது அவர்களுக்கு கோபம் கூட வர கூடும், எனவும் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்துக்கும் , அவர்களுக்கும் ,எந்தவிதமான தொடர்புகளும் இல்லை எனில் அவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பிலான காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது உரிய தரப்பினரின் பொறுப்பாகும் எனவும், உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய ஆய்வொன்றை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேர்மை என்பது பதவிகளுக்கு பின்னால் மறைந்துக்கொள்வது அல்ல எனவும், தான் தவறு செய்திருப்பின் அதனை ஆராய வழிவிடுவது தான் உண்மையான நேர்மை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.