EPF-ETF நிதியங்கள் மூலமாகவே அதிகளவில் உள்நாட்டுக் கடன்களைப் பெற்றோம்!

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான பணத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்றும், நிதியத்திற்குச் சொந்தமான பணத்தை முதலீடு செய்த பின்னர் கிடைக்கும் இலாபத்திற்கு நூற்றுக்கு 14 சதவீதமாக மாத்திரமே வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15.09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணாயக்கார,

“சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படியும், மற்றும் கடன் வழங்குனர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், தற்போது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புப் பணிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புடன், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் வெளிநாட்டுக் கடன்களாகப் பெற்றிருப்பது, அந்தந்த நாடுகளின் மக்களின் வரிப்பணம் என்பதான், நாம் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதனால், வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ள நாடு என்ற வகையில், உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல், வெளிநாட்டுக் கடன்களை மாத்திரம் மறுசீரமைக்க இடமளிக்குமாறு கோரிக்கை விடுக்க எமக்கு வாய்ப்பில்லை. எனவே, உள்நாட்டுக் கடனை மறுசீமைப்பதும் கட்டாயம் ஆகும்.

நாம் EPF-ETF நிதியங்கள் மூலமாகவே அதிகளவில் உள்நாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளோம். அதனாலேயே, இது குறித்து விவாதம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஏன் வங்கிகளில் முன்னெடுக்கப்படவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்.

அதற்கு நாம் கூறக்கூடிய தெளிவான பதில் இதுதான், வங்கிகளுக்கு தொடர்ந்தும் சுமார் 30 சதவீத அளவில் வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு மேலதிகமாக வங்கிகளுக்கு இன்னும் சுமைகளை வழங்குவதன் மூலம் வங்கிகளில் கொடுக்கல் வாங்கல் செய்யும் பொது மக்களே பொருளாதார ரீதியாக மேலும் பாதிக்கப்படுவார்கள்.

அதற்கிணங்க, அரசாங்கம் என்ற வகையில் பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்று, எதிர்வரும் காலத்திற்கு இந்த உள்நாட்டு கடன் மறுசீமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவோம். மேலும் பொது மக்கள் நிதியங்களின் உறுப்பினர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில் வாக்குறுதியளிக்கப்பட்ட 9% நலனை எதிர்காலத்திலும் வழங்க நடவடிக்கை எடுப்போம்.


அதன்படி, ஒருவருக்குச் சொந்தமான பணத்தில் 09 சதவீத வருடாந்த பலன் தொடர்ச்சியாக வழங்கப்படும். அது தவிர, 14% சதவீதம் அல்லது 30% சதவீத வரி விதிக்கப்பட மாட்டாது. இதைப் பற்றிய உண்மைகளை சிலர் திரிவுபடுத்திக் கூறுகின்றனர். மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.

ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள பணத்தை முதலீடு செய்த பிறகு கிடைக்கும் இலாபத்திற்கே 14% சதவீத வரி விதிக்கப்படுகிறது.

நமது 2.4 மில்லியன் தொழிலாளர்களில், ஒருவருக்கு இன்று வங்கியில் 10 இலட்சம் ரூபா வைப்பிலிருந்தால், அந்தத் தொகைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் தமது பணத்தைப் பெறும்போது, அவருக்கு அதற்காக ஆண்டு தோறும் 09% சதவீதம் என்ற வகையில் சேர்க்கப்பட்ட நலனை வழங்கவும் தயாராக உள்ளோம்.

மேலும், உள்நாட்டுக் கடன் மறுசீரமைக்கப்படாவிட்டால் மாத்திரமே EPF / ETF நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படும். EPF / ETF தொடர்பில் உருவாக்கப்படும் கதைகள் வெறுமனே அரசியல் கதைகள் மட்டுமே. கதைகளை உருவாக்குபவர்களுக்கு எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை.

ஊழியர் சேமலாப நிதியம் உரித்தாகும் மத்திய வங்கி, ஒரு சுயாதீனமான நிறுவனமாக இருப்பதால், அதற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்பதை நம்பிக்கையுடன் கூறுகின்றேன். தொழில் அமைச்சின் ஊடாக இந்த நிதியம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்பதையும் நாம் பொறுப்புடன் தெரிவிக்க வேண்டும்.

மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர் கொள்கையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் தரவுக் கட்டமைப்பொன்றை அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து செயல்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோன்று, தொழில் திணைக்களத்தில் உள்ள அனைத்து தரவுக் கட்டமைப்புகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான அனைத்துப் பணிகளும் இப்போது தயாராக உள்ளன. இதன் மூலம் E-சம்பள முறையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version