இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இன்றைய போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்து போயுள்ள நிலையில் போட்டி ஆரம்பமாகும் நேரத்தில் மைதானம் அரைவாசிக்கு நிறைந்துள்ளது. வெளியே ஏராளமானவர்கள் உள்வருவதற்காக காத்திருக்கின்றனர்.
மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. கடும் வெயிலும், வெப்பமும் காணப்படுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இரு அணிகளும் 7 தடவைகள் இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இது எட்டாவது தடவையாகும் . முதலாவது தொடர் குழு நிலை போட்டியாகையால் இறுதிப் போட்டியாக கருதுவதில்லை. 50 ஓவர்கள் போட்டியில் இலங்கை அணி 10 தடவைகளுக்கு, 20-20 தொடரில் ஒரு முறையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலாவது தொடரில் இலங்கை அணி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது. அதனை இறுதிப் போட்டியாக கருதுவதில்லை.
இந்தியா அணி 50 ஓவர்கள் போட்டியில் 8 தடவைகளுக்கு, 20-20 தொடரில் ஒரு தடவையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுளளது. முதலாவது தொடரில் இந்தியா அணி முதலிடத்தை பெற்றுக் கொண்டது.
அணி விபரம்
இலங்கை அணி சார்பாக உபாதையடைந்த மஹீஸ் தீக்ஷணவுக்கு பதிலாக டுஷான் ஹேமந்த இணைக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியோடு ஓய்வு வழங்கப்பட்ட இந்தியா வீரர்கள் அனைவரும் இன்றைய போட்டிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இருப்பினும் அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டு வொஷிங்டன் சுந்தர் இந்தப் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, வொஷிங்கடன் சுந்தர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்
இலங்கை
குஷல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க(தலைவர்), டுனித் வெல்லாளகே, டுஸான் ஹேமந்த, மதீஷ பத்திரனே, சரித் அசலங்க, ப்ரமோட் மதுஷான்