தியாகி திலீபனின் உருவப்படத்தை சுமந்து சென்ற வாகன பேரணி மீதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் நேற்று (17.09) மாலை திருகோணமலை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பேரணியில் பங்குபற்றிய வாகனத்தை பயன்படுத்த முடியாத அளவில், இன்னதெரியாத பலரால் தாக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரா, சாணக்கியன், இது இலங்கை மக்களின் பிரதிநிதிகள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகவே தாம் இதை கருதுவதாகவும், இவ்வாறு நடந்துகொண்ட குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய கோடியை இவ்வாறு அவமதிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில், இந்தியாவின் ”நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் இவ்வாறான ஒரு அசாதாரணம் நிகழும்போது இந்தியா அமைதி காப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து தமது கட்சி சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், ஈழவிடுதலையில் ஆயுதப் போராட்டத்தின் அறத்தினையும், அவசியத்தினையும் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய விடுதலைப்பேரொளி திலீபனின் ஈகத்தினைக்கூட நினைவுகூரக்கூடாது என்று விடுதலைப்போர் மௌனிக்கப்பட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங்களக் காடையர்களை ஏவி இலங்கை அரசு திலீபன் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்துமாயின் தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றைக்கும் மாறாது என்பதற்கு இக்கொடும் நிகழ்வு மற்றுமொரு சான்றாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.