உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் – செல்வம் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும் உள்ளூர் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வதேச விசாரணை அவசியம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை கைப்பற்றுவதற்காகவும், சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் தமிழ் பேசும் மக்களை அழிப்பது அல்லது பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலரின் செயற்பாடுகள் காரணமாக தமிழர்கள் எவ்வாறு துரோகிகளாக பார்க்கப்பட்டார்களோ அதேபோல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் மக்கள் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வதை விட இந்த விடயம் தொடர்பில் நேர்த்தியான விசாரணைகளை மேற்கொள்ளவதே சிறந்தது என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் இருக்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியம் எனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் சர்வதேச விசாரணையைக் கோரும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கையினை தாம் வலுவாக ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் குரல் எழுப்புமாறு கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version