ஆசிய விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று சீனாவில் நடைபெற்ற தாய்லாந்து அணியுடனான போட்டியில் 08 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
மழை காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பாடிய தாய்லாந்து மகளிர் அணி 07 விக்கெட்கள் இழப்பிற்கு 78 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஏழாமிலக்க வீராங்கனை சனிதா சுத்திரிருவங் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் இனோஷி பிரியதர்ஷினி 04 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 10.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அனுஸ்கா சஞ்சீவினி 32 ஓட்டங்களையும், சாமரி அத்தப்பத்து 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 24 ஆம் திகதி பாகிஸ்தான் மகளிர் அணியுடன் அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
இந்தியா மகளிர் அணி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.