நிபா வைரஸ் தொடர்பில் நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்குமாறு அறிவுரை!

நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, உரிய நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமலி கொத்தலாவலவிடம், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (23.09) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

பேராதனையில் உள்ள DAPH அலுவலகத்திற்கு விஜயம் செய்த வேளையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம், இந்த நோய் இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பன்றிகளினால் இந்நோய் பரவக் கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டில் உள்ள பன்றிகளை மையமாக வைத்து நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்துத் துறைகளும் பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது போல், நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version