கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், தினேஷ் சாப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த டினேஷ் சாப்டரின் இறுதிக்கிரியைகள் ஏற்கனவே நடைபெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளை மீள செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்ற அனுமதியோடு பாதுகாப்புக்கு மத்தியில் மீண்டும் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
அவரது உடற்கூற்று பரிசோதனைகள் நிறைவடைந்ததாகவும் உடலை விடுவிக்க முடியுமெனவும் விசேட வைத்திய நிபுணர் குழு இன்று(25.09) நீதிமன்றத்துக்கு அறிவித்ததனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அதிலேயே இந்த உத்தரவை நீதிபதி வழங்கியுள்ளார்.
விசேட நிபுணர் குழு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு டினேஷ் சாப்டரின் உடலை வழங்குமாறு உத்தரவிடுமாறும், பேராசிரியர் க்ளிபேர்ட் பெரேரா, சட்ட வைத்திய அதிகாரி P.R ருவன்புர ஆகியோரின் மேற்பார்வையில் உடலை வழங்க உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
டினேஷ் சாப்டரின் இறப்பில் சந்தேகம் நிலவும் நிலையில், உடற்கூற்று பரிசோதனையில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பு பொரளை பொது மயானத்தில் அவரது காரில் கைகள் மற்றும் கழுத்து இறுக்கப்ட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டினேஷ் சாப்டர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.
இவரது இறப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற முடிவு இன்றி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.