மலேசிய தலைநகரின் கோலாலம்பூரின் மத்திய பகுதியான சென்டூல் எனும் இடத்தில இலங்கை ஆண்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸார் உறுதி செய்துள்ளனர். மூவரும் பிளாஸ்டிக் பைகளினுள் தலையை கட்டி கொலை செய்யப்பட்டுளளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஒரு வீட்டின் பொருட்கள் வைக்கும் அறையில் மூவரது உடல்களும் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும், அவர்களில் ஒருவரது உடல் ஆடைகளின்றி காணப்பபட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் சம்பவம் நடைபெற்ற இரவு 11 மணியளவில் சண்டை பிடித்த சத்தம் கேட்டதாக அயலவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்துக்கு சென்றதாகவும் அதன்போதே இறந்த மூவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் வாடைக்கு வாழ்ந்து வந்த குடும்பத்தினரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுததர வயது தம்பதி மற்றும் அவர்களது 20 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும், அதற்கு இரண்டு தினங்களுக்கு முதல் அந்த வீட்டுக்கு வருகை தந்த இரண்டு பேரே கொலைகளை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்டூல் பொலிஸ் உதவி ஆணையாளர் கூறியுள்ளார். இறந்தவர்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்படவில்லை. மலேசிய இலங்கை தூதரடகத்திடம் தகவல்கள் கேட்டபோது அவர்கள் வழங்கவில்லை என மலேசிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.