நாட்டு பிரச்சினைகளை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டியது நமது கடமை – சஜித்

பாடசாலைகளில் அரசியல் பேசுவதாக தம் மீது குற்றம் சாட்டப்படுவதாகவும், அவற்றிற்குச் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால், பிள்ளைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற வாசகம் இன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று சிந்திக்க வேண்டும் என்றும், பிள்ளைகள் எல்லோரையும் விட மதிப்புமிக்கவர்களாக இருந்தால் அவர்கள் உண்மையைப் பேச வேண்டும் என்றும், உண்மையப் பேச கோவில், விகாரை, தேவாலயம், பாடசாலை என்று வரையறுக்க வேண்டியதில்லை என்றும், இவ்வாறான பொய்யான வாதங்களை முன்வைப்பவர்கள் மக்களுக்கும் தெரியாமல் திருடி நாட்டின் பணத்தை பிக்பொக்கட் அடித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று (01.10) ஹோமாகம சுபாரதி வித்தியாலயத்திற்கு பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் 80 ஆவது பாடசாலை பஸ் நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

பல்வேறு தரப்பினரின் அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி ஒருவர் பதவி விலகினார் என்றும்,
இவ்வாறானதொரு பயங்கரமான நிலை உருவாகியுள்ளமை தொடர்பில் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இன்னும் 15 ஆண்டுகளுக்குள் நாட்டின் யானை வளம் அழிந்துவிடும் என்றும், கடந்த 12 ஆண்டுகளில் 3765 யானைகள் உயிரிழந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் 271 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த வாரம் மட்டும் 11 யானைகள் உயிரிழந்துள்ளன என்றும், பசுமைப் பொருளாதாரம், பசுமை அபிவிருத்தி என்ற வார்த்தைகள் பொய்யாகச் சொல்லப்பட்டாலும் அதைச் செயற்படுத்த வேண்டும் என்றும், இந்த காட்டு யானை வளத்தை இந்நாட்டில் டொலர் சம்பாதிக்கும் ஓர் அங்கமாக மாற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நமது நாட்டின் சுகாதாரத் துறையில் தரவு கட்டமைப்பிற்காக கோடிக்கணக்கான வரி செலுத்துவோரின் பணம் முதலீடு செய்யப்பட்டாலும் அது செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வங்குரோத்தான நாட்டிலும் தரம் குறைந்த மருந்துகளும் தடுப்பூசிகளும் கொண்டு வரப்பட்டு கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுகின்றது என்றும்,நோய் எதிர்ப்பு சக்திக்காக பயன்படுத்தும் தடுப்பூசி குப்பியொன்று 22500 ரூபா என்றும் அவர் தெரிவித்தார்.

3 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டாலும், அவை அனைத்தும் தரம் குறைந்த மருந்துகள் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், டெண்டர் நடைமுறைக்கு புறம்பாக கொண்டு வரப்பட்ட இந்த தடுப்பூசியால் கோடிக்கணக்கில் பணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர, நாட்டில் கையிருப்பில் உள்ள மருந்துகளை கூட வாங்க தயாராக உள்ளதாகவும், இவை குறித்து சிறார்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டுப் பிள்ளைகள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தாய்மார்களுக்குக் கிடைக்க வேண்டிய திரிபோசா கூபன் பிள்ளைகளுக்குப் பறிக்கப்பட்டு, திரிபோசா தொழிற்சாலையை விற்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

1959 இல் சிறுவர் உரிமைகள் பற்றிய பிரகடனம் வெளியிடப்பட்டது என்றும்,1989 இல்,சிறுவர் உரிமைகள் பற்றிய உலக சாசனம் முன்வைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சிறுவர்களின் நலன், கல்வி, சுகாதாரம் என அனைத்து வகையிலும் மேம்பட்ட சிறுவர்களின் தலைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது என்றும், ஒரு நாடு என்ற வகையில் இந்த சாசனங்களில் நாம் கைச்சாத்திட்டிருந்தாலும், இந்த சாசனங்களில் உள்ள அடிப்படை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எந்தளவுக்கு உழைத்துள்ளோம் என்பதில் பிரச்சினை இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் காரணமாக அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் கூட வரையறுக்கப்பட்டுள்ளன என்றும், எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இவை விரிவுபடுத்தப்பட்டு கல்வி, சுகாதாரம், சிறந்த வாழ்க்கை முறை, பொருளாதாரம், சமூகம்,
கலாசாரம் மற்றும் மத உரிமைகள் அடங்கிய அடிப்படை உரிமைகள் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ளடக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருங்கச் செய்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன், நமது நாட்டு மக்கள், குறிப்பாக சிறுவர்கள் வாழும் உரிமையை மரபுரிமையாகப் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நமது நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு போன்றவற்றை ஒழித்து, வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய தூய்மையான அரசை உருவாக்க வேண்டும் என்றும், இவ்வாறான அரசாங்கம் உருவானால் நாட்டுக்காக மக்கள் தியாகம் செய்வது தேவையற்றது என்றும்,
அரசாங்கங்கள் நியமிக்கப்படுவது மக்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலையை வழங்குவதற்கே என்றும், நாட்டின் தலைவன் நாட்டு மக்களின் காவலன் என்றும், மக்கள் துன்பப்படும் போது அவரது உள்ளம் உருக வேண்டும் என்றும், இரக்கம், கருணை, பரிவு இல்லாது பதவிகளில் இருந்து பயனில்லை என்றும், மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டு ஊழலை ஒழிக்கும் அரசாங்கமே இந்த நாட்டுக்கும் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சரியான உணவு இல்லை என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும், பாடசாலை பிள்ளைகள் உணவின்றி மயங்கி விழுவதாகவும்,
அடிப்படை உரிமையான மதிய உணவு கூட அரசால் மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் இது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க கையடக்கத் தொலைபேசி அல்லது டேப் சாதனம் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கும் அவை வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

தற்போது நாடு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்து வருவதால், இதற்கான விடைகளையும் தீர்வுகளையும் பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்றும், சர்வதேச சிறுவர் தினத்தன்று கூட ஒரு பாடசாலைக்கு பேருந்தை நன்கொடையாக வழங்குவது என்பது கடந்த காலத்தில் கோரப்பட்ட முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும், சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து 75 ஆண்டுகள் ஆட்சிக்கு வந்தே சேவையாற்றியதாகவும், எதிர்க்கட்சிகள் சதி செய்து ஆட்சியை கைப்பற்றுவதை முன்னெடுத்தாலும், இந்த சம்பிரதாயத்தை ஐக்கிய மக்கள் சக்தி கடந்த மூன்று ஆண்டுகளில் மாற்றியமைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நன்கொடைகளை வழங்குவதில் எந்தவிதமான ஊழல் மோசடிகளும் இடம்பெறவில்லை என்றும், அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலவசக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தி பிரபஞ்சம் பஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பஸ்களை வழங்கியுள்ளதுடன் இதற்காக 3892 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 33 அரச பாடசாலைகளுக்கு 290 இலட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 1719 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version