மலையகத்திற்கான பத்தாயிரம் வீட்டு திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பத்தாயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11.10) கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்வில் இலங்கை சார்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இந்தியாவின் சார்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பதுளை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலேயே மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை – இந்திய உறவுகளுக்கு 75 வருடம் பூர்த்தியாவதையிட்டு விசேட நினைவுச் சின்னமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்பட்டன.

இந்நிகழ்வில் இந்தியா சார்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் புனீத் அகர்வால் ஜே.பீ.சிங், இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரசூ புரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை சார்பில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் தேனுக விதான கமகே, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version