லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த குழந்தையின் மருத்துவப் பதிவேடுகளை வைத்தியசாலை இதுவரையில ஒப்படைக்காமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (11.10) உத்தரவிட்டுள்ளார்.
உரிய விசாரணையின்போது, சாட்சிகளுக்கு உரிய பரிசோதனை அறிக்கைகள் காண்பிக்கப்பட வேண்டிய நிலையில் மருத்துவப் பதிவுகள் இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுவத்தாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சகல அறிக்கைகளையும் வழங்குமாறு கோரிய போதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிக்கைகளை வழங்காதது தொடர்பான உண்மைகளை பொலிசார் தெரிவிக்க வேண்டும் எனவும், அறிக்கைகள் வைத்தியசாலையினால் வழங்கப்படாவிட்டால் பணிப்பாளரையும் நீதிமன்றத்திற்கு அழைக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.