“இயற்கை இணக்கப்பாட்டுக்கான பசுமை பட்டுப்பாதை” உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

உலகில் வெப்ப வலய நாடுகளே, உயிரியல் பல்வகைத்தன்மையை அதிகமாக கொண்டுள்ளன. எனவே, அந்த நாடுகளை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டம ஒன்றை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியுமென “இயற்கை இணக்கப்பாட்டுக்கான பசுமை பட்டுப்பாதை” உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துளளார்.

உலகின் 80% உள்ளூர் தாவரங்களும், 50% பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலங்களும் வெப்ப வலயத்திற்குள்ளேயே காணப்படுவதாகவும், அதனை அடிப்படையாக கொண்டே காலநிலை மாற்றம் தொடர்பிலான பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியை இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மூன்றாவது “பெல்ட் அண்ட் ரோட்” சர்வதேச மாநாட்டிற்கு இணையாக இன்று (18) சீன சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “இயற்கை இணக்கப்பாட்டுக்கான பசுமை பட்டுப்பாதை” என்ற உச்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்மாநாடு சீன மக்கள் குடியரசின் உப ஜனாதிபதி ஹன் ஷென்க் (Han Zheng) இன்
தலைமையில் ஆரம்பமாகியது.

இம்மாநாட்டில் பங்கேற்றிருந்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres), ஏனைய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றினர்.

மூன்று முக்கிய புவிசார் நெருக்கடிகளாக கருதப்படும், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உயிர் பல்வகைத்தன்மை அழிவடைதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான அவசர நடவடிக்கையாக காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற யோசனையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் தெரிவித்த முக்கிய விடயங்கள்

“மேற்படி பல்கலைக்கழகத்தின் ஊடாக மூன்று முக்கிய விடயங்களை அடைந்துகொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம். முதலாவதாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு இணைப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வு என்பவற்றை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக தெரிவுகளை பகிர்ந்துகொள்வதையும், மூன்றாவதாக செயன்முறைக் கல்வியையும் எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் இப் பல்கலைக்கழகத்தின் உதவியோடு காலநிலை மாற்றங்களை குறைந்த அளவில் பேணிச் செல்வதற்கான ஆய்வுகளை முன்னெடுத்தல், உரிய முகவர் நிலையங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், சர்வதேச ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆராயவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸ் அளவிற்கு மட்டுப்படுத்திற்கொள்வதற்கு அவசியமான தெரிவு, ஆய்வுகளின் ஊடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ளல். காலநிலை அனர்த்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் இந்த பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக நாடுகள் பலவும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியே, காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான போராட்டத்திற்கு தடையாக அமைந்திருக்கிறது. அவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பது கடினமானதும் சிக்கலானதுமான விடயமாக மாறியுள்ளது.

அதனால், உலகின் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு தீர்வுகளை தேடுவதே பொருத்தமானதாக அமையும். அது தொடர்பிலான 03 யோசனைகளையும் நான் முன்வைக்க விரும்புகிறேன்.

முதலாவதாக குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு கடன் சலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும், அடுத்ததாக உயர் வருமானம் ஈட்டும் நாடுகளிலிடத்திலிருந்து சலுகைக் கடன்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் அதேநேரம் மூன்றாவதாக, ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கி உள்ளிட்ட பல்துறைசார் அமைப்புக்கள் ஊடாக மேலதிக நிதியங்களை வழங்க வேண்டும்.

நான் இதற்கு முன்னதாக 150 வெப்ப வலய நாடுகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளேன். அவற்றில் 88 நாடுகள் “பெல்ட் அண்ட் ரோட்” வேலைத்திட்டத்தின் பங்குதாரர்கள். வெப்ப வலயம் உலகத்தின் 40% நிலப்பரப்பை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அதற்குள்ளேயே உலகின் 40% சனத்தொகையும் காணப்படுகிறது.

அவ்வாறான பின்னணியில் நிலையான அபிவிருத்தி பாதையில் சுற்றாடல் தேவைப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து இவ்வாறான மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்தமைக்காக சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங் தலைமையிலான சீன மக்கள் குடியரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

2021 ஆம் ஆண்டில் “ஒன் பெல்ட் ஒன் ரோட்” உச்சிமாநாட்டிலும் இலங்கை பசுமை பட்டுப்பாதை வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்கியது. எதிர்காலத்திலும் ஆதரவை வழங்கும்.” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version