”அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் நன்மைகளை பெற தெரிவு செய்யப்பட்டபோதிலும், நன்மைகளைப் பெறுவதற்காக வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்காத அனைத்து பயனாளிகளையும் கூடிய விரைவில் வங்கிக் கணக்கை ஆரம்பிக்குமாறு ”அஸ்வெசும” நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன அறிவித்துள்ளார்.
பயனாளிகளினால் வங்கிக் கணக்குகள் திறக்கப்படாததால், 156,261 பயனாளிகளுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில், நலன்புரி நன்மைகள் சபை உள்ளிட்ட உரிய தரப்பினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜயந்த விஜேரத்ன இதனைக் தெரிவித்துள்ளார்.
மேலும், மேன்முறையீடுகள், ஆட்செபனைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், மேலும் சில பயனாளிகளுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தாமதத்திற்கான காரணங்களை ஆராய்ந்து உடனடி தீர்வுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு இலட்சம் பயனாளிகள் இதுவரையில் வங்கிக் கணக்கைத் திறக்காத காரணத்தினால் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே கணக்கைத் திறந்தவுடனேயே எவ்வித பிரச்சினையும் இன்றி அது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் ஜயந்த விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.