இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை உற்பத்தி விலையில் வழங்க அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
தேயிலை செய்கைக்கு தேவையான உரத்தை சலுகை விலையில் வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தேயிலை உற்பத்தியாளர்களின் சுயாதீன ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேயிலை, கறுவா, தென்னை உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்களுக்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா உரக் கம்பனியும் வர்த்தக உரக் கம்பனியும் தற்போது விசேட கலப்பு உரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த உரமானது தேயிலை பயிர்ச்செய்கைக்கு மிகவும் ஏற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேயிலை கைத்தொழிலுக்கு மானிய விலையில் உரம் வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.