விளையாட்டு துறை அமைச்சரின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது ஸ்ரீலங்கா கிரிக்கெட்

விளையாட்டு துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் ஊழல் நடைபெற்றுளளதாக தெரிவிக்கப்படவில்லை எனவும், செலவினங்களை குறைப்பதற்கான பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளதாகவும் அந்த பரிந்துரைகள் தொடர்பில் தாம் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்க்கெட் நிர்வாக குழு இன்று(08.11) நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அண்மையில் தான் பதவி விலகுவதாக அறிவித்த செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை. உபசெயலாளர் க்ரிசாந்த கப்புவத்த, உபதலைவர் ரவீன் விக்ரமரட்ன, பொருளாளர் சுஜீவ கொடலியத்த, பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கை இதன்போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போதைய நிர்வாக சபை வினைத்திறனாக செயற்படுவதாகவும், விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் இணைந்து ஆரம்பத்தில் செயற்பட்ட போதும், அவர் யாரோ கூறுவதனை கேட்டுக்கொண்டு தற்போது இவ்வாறு நடந்து கொள்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்து.

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண தொடருக்கு மைதானங்களை தயார் செய்ய வழங்கப்பட்ட காசோலைகளை ஒரு நாள் தலைவராக வந்த அரஜுனா ரணதுங்க பார்த்துவிட்டு பாரிய தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் எனவும் மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண தொடர் இலங்கையிலிருந்து கைநழுவிப்போகும் அபாயம் காணப்படுவதாகவும், இலங்கை கிரிக்கெட்டினால் விளையாட்டு அமைச்சிடம் கோரப்பட்ட அனுமதிகள் 3 மாதங்களை கடந்ததும் இன்னமும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அதற்கான தீர்வுகளை உலகக்கிண்ணம் நிறைவடைந்து அவர்கள் நாடு திரும்பியதும் கலந்து பேசி தீர்வு காணவேண்டும் எனவும், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் காரணமாக பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version