இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இழுவைப் படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 38 பேர் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டமையால் நேற்றையதினம் (09.11) வியாழக்கிழமை, ஒத்திவைக்கப்பட்ட தண்டனை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 03 படகுகளில் வந்த 23 மீனவர்களுமாகிய 38 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் மன்னார் கடற்றொழில், நீரியல்வள திணைக்களத்தின் அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காகக் கையளிக்கப் பட்டிருந்தனர்.

இவர்கள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடித்தமை,
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தமை, மற்றும் இழுவை மடிகளை படகுக்குள் வைக்காது கடலில் இழுத்துக் கொண்டு வந்தமை ஆகிய மூன்று குற்றச் சாட்டுகளே இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தவையாகும்

இதைத் தொடர்ந்து இவர்களை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்த நிலையில் இவர்களின் வழக்கு நேற்றையதினம்,09/11,வியாழக் கிழமை மன்னார் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோது இவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர்.

இதனால் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குற்றச் சாட்டுக்களுக்கும் தலா ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சாதாரண சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன.

அத்துடன் இவர்கள் மீரிகம முகாமுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும் படகுகளின் உரிமையாளர்களுக்கு மன்றில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பி வைக்கும்படியும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்திய மீனவர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி, ஜெபநேசன் லோகு, அவர்களும் மற்றும் சட்டத்தரணி செ.டினேஸ் அவர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இந்திய மீனவர்களின் நலன் கருதி யாழ் இந்தியத் துணை தூதரகத்திலிருந்து உதவி ஆலோசகர் பிரவீன் போல் அவர்களும் மன்றில் தோன்றி இருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version