நவம்பர் 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஷம்மி சில்வா அடிப்படையற்ற மற்றும் மூர்க்கத்தனமான அறிக்கையை வெளியிட்டதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய விளையாட்டு நிதியத்திற்கு வழங்கிய பணத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள், துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள விளையாட்டு அமைச்சு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தேசிய விளையாட்டு நிதிக்கு வரவு வைக்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஊடகங்களுக்கு முன்னால் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு தனது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வெறித்தனமாக செயற்படும் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகதிற்கு இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்தும் திட்டம் இல்லை எனவும், பாரிய சலுகைகளை பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் தமது பணியை நேர்த்தியாக செய்வதில்லை எனவும், பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற அறிவும் தொலைநோக்கு பார்வையும் இருந்திருந்தால் நாட்டை பாதுகாக்கும் வகையில் குறித்த நிர்வாகம் செயற்பட்டிருக்கும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (12.11) இடம்பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆரம்பம் முதலே உணர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கடந்த T20 உலகக் கிண்ண அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடர்பான குசல சரோஜனி அறிக்கை மற்றும் உயர்மட்ட கணக்காய்வு நிறுவனமான தேசிய கணக்காய்வு அலுவலகம் வழங்கிய கணக்காய்வு அறிக்கையின் கருத்திற்கொண்டு ஊழல் மற்றும் தோல்வியடைந்த கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்தும் திறன் கொண்ட இடைக்கால நிர்வாக குழுவை நியமித்த போதிலும், அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத ஆட்சியாளர்கள் அங்கேயே இருந்துகொண்டு ஊடகங்கள் ஊடாக பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்து, வருகின்றனர். தங்கள் நாட்டுக்கு எதிரான துரோக செயலில் ஈடுபட்டு தங்கள் அதிகாரத்தை காப்பாற்றி வருவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
| தேசிய விளையாட்டு நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய தொகை | ரூ.289,990,000.00 |
| தேசிய விளையாட்டு நிதியத்தின் இதுவரையான செலவு | ரூ.257,349,179.00 |
| மீதி கையிருப்பு | ரூ. 32,640,821.00 |
| மொத்த வரவுகள் மற்றும் செலவினங்களின் விரிவான அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. | |