தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல நோய்கள் சிறுவர்களிடையே அதிகம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய நாட்களாக சுவாசக்குழாய் நோய்களான இருமல், சளி, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், குழந்தைப் பருவத்தில் ஹெபடைடிஸ், வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் போன்றவை குழந்தைகளிடையே பரவி வருவதாகவும், மேலும், கை கால் வாய் நோய் அதிகம் பரவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இருமல், சளி, காய்ச்சல் உங்கள் குழந்தைகளுக்கு இருக்குமாயின், அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதால், சூழலை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறை செலுத்துமாறும், ஆரோக்கியமான உணவுகளை மாத்திரம் குழந்தைகளுக்கு வழங்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்கள் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.