மன்னார் தீவில் ஒரு குழுவினர் அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு பொது மக்களின் காணிகளை நீண்ட காலமாக அபகரித்து வரும் செயற்பாட்டினால் இரு இனங்களுக்கிடையே முறுகல் நிலை தோன்றும் அபாயம் ஏற்பட்டு வருவதை மன்னார் பிரஜைகள் குழு கவனத்தில் எடுத்துள்ளது.
மன்னார் தீவில் ஒரு குழுவினர் 2012 ஆம் ஆண்டிலிருந்து தனியாருக்கும் மன்னார் ஆயர் இல்லத்துக்கும் சொந்தமான காணிகளை அடாத்தாக பிடித்து வெளிநபர்களுக்கு விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னனியில் ஒரு அரசியல்வாதி செயற்பட்டு வருவதாக மன்னார்,பிரஜைகள் குழுவுக்கு பல புகார்கள் வந்த வண்ணமாக இருப்பதாக கடந்த 25/11 சனிக்கிழமை நடைபெற்ற பிரஜைகள் குழுவின் நிர்வாகக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினரின் அடாவடித்தனத்தைப் பொலிசாரிடம் முறையீடு செய்தாலும் பொலிசார் அவர்களுக்குச் சார்பாகவே செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனத்தினால் மன்னாரில் இரு சமூகங்களுக்கிடையே சமாதானச் சீர்குலைவு எற்படும் அபாயமும் தோன்றுவதை அவதானிக்க முடிகிறதாக மன்னார் பிரஜைகள் குழு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மன்னாரிலுள்ள மௌலவிமாருடன் கலந்துரையாடுவதுடன் இந்த விடயத்தை உலமாக்கள் சபைக்கும் தெரியப்படுத்தி மன்னாரில் இரு சமூகங்களுக்கிடையே முறுகல் நிலை தோன்றாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.