ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்தினால் நாட்டுக்கு பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் எனவும், இதற்காக சட்ட ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் ஆதரவு வழங்கத் தயார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
மக்கள் ஆணையைக் கொண்ட ஜனாதிபதியும் அரசாங்கமும் தான் நாட்டிற்குத் தேவை என்றும், ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதே ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரே நாளில் அகற்றுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (29.11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ராஜபக்சர்கள் உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் அவரை தோற்கடிப்போம் என்றும்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பரந்த கூட்டணியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர்தெரிவித்தார்.
சட்டங்களை மாற்றுவேன், திருடர்களை பிடிக்கும் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பேன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேசத்தின் ஆதரவைப் பெறுவேன் என ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் பாராளுமன்றத்திலும் நாட்டிலும் அறிக்கைகளை விடுத்தார்.என்றாலும் இன்று ஜனாதிபதி அந்த விடயங்களையெல்லாம் மறந்துவிட்டார்.நாட்டின் பணத்தை திருடிய நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி அந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வர ஜனாதிபதிக்கு தற்போது விருப்பம் இல்லை போலும். ரணில் ராஜபக்ச அரசாங்கம் திருடர்களுடன் காலம் கடத்துவது போல் தெரிகிறது.
நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்த திருடர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த திருடர்கள் ஜனாதிபதியை பாதுகாக்கின்றனர். நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த திருடர்களை ஜனாதிபதி பாதுகாக்கிறார்.நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்த திருடர்களை ரணில் ராஜபக்ச அரசாங்கம் ஒருபோதும் சட்டத்தின் முன் நிறுத்தாது.அந்த திருடர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமானால் ரணில் ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஒரு குழுவினர் தெரிவிக்கின்றனர்.ஜனாதிபதி கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி விரைவில் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்துங்கள்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ராஜபக்சர்கள் உதவிய போதிலும் நாம் அவரை தோற்கடிப்போம். ரணில் விக்கிரமசிங்க தனியாகக் கேட்டாலும் அவரை தோற்கடிப்போம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாத விடுத்து ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.அடுத்த வருடம் கூடிய விரைவில் ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.மக்கள் ஆணையில்லாத அரசாங்கத்திடம் இருந்து நாட்டு மக்கள் விரும்புவதை எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஜனாதிபதி தேர்தலில் எப்படி கேட்டாலும் அதுக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் கூடிய விரைவில் நடத்துவதுதான் எமக்குத் தேவையானவை.
முடிந்தால் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒரே நாளில் நடத்துங்கள்.அத்தகைய யோசனையுடன் நாங்கள் உடன்படுகிறோம்.மக்கள் ஆணையைக் கொண்ட ஒரு ஜனாதிபதியும், மக்கள் ஆணையைக் கொண்ட ஒரு அரசாங்கமும் தான் தேவை.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அவர்கள் இன்னும் அந்தக் கருத்தில்தான் இருக்கிறார்கள்.ஆனால்,ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இது குறித்த எதுவும் பேசப்படவில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான அனைத்து அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் வாக்களித்தவர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தி கொள்கையின் அடிப்படையிலையே வாக்களித்தது.
அரசியலமைப்புத் திருத்தத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் அரசியலமைப்பு பேரவை கொண்டுவரப்பட்டது.ஆனால் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான சவாலாக அரசியலமைப்பு பேரவை மாறியுள்ளது.அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு அங்கம் என்று ஜனாதிபதி நினைக்கிறார்.பாராளுமன்றத்தை இவ்வாறு உதைப்பதை அனுமதிக்க முடியாது.
இது தொடர்பாக சபாநாயகர் பதில் அளிக்க வேண்டும்.
அரசியலமைப்பு பேரவையை பலப்படுத்துவதற்குப் பதிலாக,பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலம் அரசியலமைப்பு பேரவையின் பணியை சீர்குலைக்கவே ஜனாதிபதி விரும்புகிறார்.ஜனாதிபதி பாராளுமன்றத்தை அவமதிக்கிறார்.மறுபுறம் நீதிமன்றத்தை குற்றம் சாட்டுகிறார்.இன்று ஜனாதிபதி நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நடத்தவே விரும்புகிறார்.
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் ஜனநாயக நெருக்கடியிலிருந்து நாட்டைக் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றே தீர்வு. நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தை எடுக்க தயார்.