இலங்கை அணியின் முன்னாள் வீரர் உப்புல் தரங்க தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று(05.12) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கியுள்ள 10 பேரிலிருந்து இவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஹரின் கூறியிருந்தார். உப்புல் தரங்க இன்னமும் முதற் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் அவர் தெரிவுக்குழு தலைவராக நியமிக்க முடியாது என நம்பப்படுகிறது.
விளையாட்டு அமைச்சரின் அறிவிப்பு தொடர்பில் உப்புல் தரங்கவோ, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டோ இன்னமும் அறிவிக்கவில்லை. தெரிவுக்குழுவை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியது ஸ்ரீலங்கா கிரிக்கெட். ஸ்ரீலங்கா கிரிக்கட் இதுவரை அறிவிக்கவில்லை.
உப்புல் தரங்க இந்தியாவில் சிரேஷ்ட வீரர்களுக்கான போட்டியில் பங்குபற்றி வருகிறார். இவர் இறுதியாக கடந்த மாதம் 10 ஆம் திகதி ஆரம்பித்த NCC அணிக்கும், சிலாபம் கிரிக்கெட் கழகத்துக்குமான போட்டியில் விளையாடியிருந்தார். முதற் தரப்போட்டிகளில் ஓய்வு பெற்றதாக அவர் இதுவரை அறிவிக்கவில்லை.