இலங்கை கடற்படைக்கான 4000 தொன் மிதக்கும் கப்பல்துறை Goa Shipyard Ltd நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான அடித்தளமிடல் விழா 2023 டிசம்பர் 06 ஆம் திகதி கோவாவில் உள்ள Dempo Shipbuilding and Engineering Pvt. Ltd. (DSEPL) நிறுவனத்தில் நடைபெற்றதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவமிக்க இந்த விழாவில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் UVMP பெரேரா ஆகியோரும், மிதக்கும் கப்பல் துறையின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் இருதரப்பையும் சேர்ந்த ஒன்றிணைந்த கண்காணிப்பு குழுவின் சகல பிரதிநிதிகளும் மெய்நிகர் மார்க்கமூடாக பங்கேற்றிருந்தனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒத்துழைப்பு, தோழமை மற்றும் நட்புறவு ஆகியவற்றின் நிலைபேறான பிணைப்பினை பிரதிபலிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளதாக இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் தெரிவித்தார். அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு ஆகியவற்றை நனவாக்கும் நோக்கில் இலங்கை பாதுகாப்பு படைகளின் திறன் விருத்தி மற்றும் ஸ்திரமான அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்தும் திடசங்கல்ப்பம் பூண்டுள்ளது. மேலும் இந்திய இலங்கை கடற்படையினரது வலுவான பிணைப்பினை மீள வலியுறுத்துவதாக குறித்த மிதக்கும் கப்பல் துறையினை இலங்கை கடற்படைக்கு வழங்கும் திட்டம் அமைந்திருப்பதாகவும் அவர் இச்சந்தர்ப்பத்தில் மேலும் கூறினார். இதன் மூலமாக இலங்கை கடற்படையின் சகல பராமரிப்பு தேவைகளும் நிவர்த்திசெய்யப்படுவதுடன் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பும் மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தினை உரிய நேரத்தில் பூர்த்தி செய்தமைக்காகவும் அதற்காக பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் உயர் ஸ்தானிகர் தனது நன்றியினைத் தெரிவித்தார். இந்த நிகழ்வை மெய்நிகர் மார்க்கமூடாகவும் நேரடியாகவும் ஒழுங்கமைத்த Goa Shipyard Limited நிறுவனத்துக்கு உயர் ஸ்தானிகர் தனது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.
இலங்கை கடற்படைக்கு மிதக்கும் கப்பல்துறையினை பரிசாக வழங்கும் செயற்பாடு இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் நட்புறவையும் குறிக்கிறது. இலங்கை கடற்படைக்கு 4000தொன் மிதக்கும் கப்பல் துறையை அன்பளிப்பாக வழங்குவதற்கான ஒப்பந்தம் 2022 மார்ச் 15 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இம்மிதக்கும் கப்பல்துறை 115 மீட்டர் நீளமுள்ள கப்பல்களை இணைக்கும் திறன் கொண்டதுடன் 4000 தொன் நிறையினை தூக்கும் திறனையும் கொண்டுள்ளது.