நீதிபதியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் போராட்டம்…!

நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரசிறி அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில் மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதான நகரின் பொது மக்கள் ,வியாபாரிகள் , விவசாயிகள் என பலரும் இணைந்து இன்று காலை நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களின் திறமையின்மையினால் வழக்குகள் தாமதப்படுவதாக நீதவான் குற்றம் சுமத்தியதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி நீதவானின் பணிப்புரைக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் நீதிமன்ற கடமைகளில் இருந்து வெளியேறினர்.

இதன்காரணமாக நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரசிறிக்கு தண்டனையின் அடிப்படையில் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில் மாவட்ட நீதிபதியாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நுவரெலியா நீதிமன்றத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி தவறுகள் குறித்து உரிய தண்டனை வழங்குவதுடன் பொதுமக்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தும் நீதவான் குஷிகா குமாரசிறி இடமாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதியை தொடர்ந்தும் நுவரெலியா நீதிமன்றத்தில் கடமையாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் நீதிபதியின் இடமாற்றம் உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version