நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பெரிதும் பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் இதுவரை 444 குடும்பங்களைச் சேர்ந்த 1533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளதுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 15.12.2023 தொடக்கம் 17.12.2023 வரை தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 783 பேரும்,நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 627 பேரும் மடு பிரதேச செயலகப் பிரிவில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் 3 முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும்

மடு பிரதேச செயலகப் பிரிவில் ஒரு முகாமில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் நானாட்டான் மற்றும் மாந்தை மேற்குப் பகுதியில் தலா ஒரு வீடு வீதம் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மல்வத்து ஒயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் தந்திரிமலைப் பகுதியில் சிறியளவிலான வெள்ளம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மன்னாரில் தேக்கம் மற்றும் அருவியாறு பகுதியின் தாழ்நிலங்களில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version