சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதப் போதகர் கைது!

கிருலப்பனை மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 63 வயதுடைய போதகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய கைத்தொலைபேசியும் ஆபாசப் படங்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் தங்கியிருந்த 23 வயதுடைய யுவதி ஒருவரும் 11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 8 சிறுமிகளும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 6 சகோதரிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் விடுதியின் போதகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் தான் கல்வி கற்கும் பாடசாலை அதிபரிடம் தெரிவித்ததையடுத்து, அதிபர் கிருலப்பனை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த விடுதிக்கு சென்ற விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​அங்கு தங்கியிருந்த 23 வயதுடைய யுவதி வேலை செய்து வருவதாகவும், ஏனைய 8 சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதாகவும் தெரியவந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான குறித்த போதகரால் மேலும் நான்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளமையும் மற்றொரு சிறுமியை அவர் பயன்படுத்திய செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும், கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றிற்கு சொந்தமான குறித்த காப்பகம் பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வருவதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குறித்த போதகருக்கு உதவிய வேறு நபர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனக் டி சில்வாவின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகப் பொறுப்பதிகாரி தமரா நில்மினி உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version