மன்னார் பேசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (18.12) பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் ஒரு வீதியில், பாடசாலை ஒன்றுக்கு முன்பாக அமைந்துள்ள வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் வசித்து வந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் அரச திணைக்களத்தில் பணிபுரிந்து வருவதனால் சம்பவம் நிகழ்ந்த அன்று இருவரும் காலையில் தங்கள் பணிக்குச் சென்றபின்னர் திருடர்கள் மதிலால் பாய்ந்து வீட்டின் முன் கதவை உடைத்தே திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட தங்க நகைகள், மற்றும் முப்பது ஆயிரம் ரூபாவுக்கு அதிகமானபணம் திருட்டப்பட்டுள்ளதாக, பேசாலை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் வெளிக்கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் முன் கதவு திறந்திருந்தனால் அவ்வீதியினால் பயணித்த உறவினர் ஒருவர் சந்தேகம் கொண்டு வீட்டாருக்குத் தெரிவித்த பின்பே இத்திருட்டுச் சம்பவம் தெரிய வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் காலை 8 மணிக்கும் காலை 10 மணிக்கும் இடையே இடம்பெற்றிருப்பதாகவும் சம்பவ வேளையில் கனமழை பெய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பேசாலை பொலிசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுவருகின்றனர். சந்தேக நபர் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.