நவீன அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (19.12) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சுனாமி பேரலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 14 மாவட்டங்களில் கிட்டத்தட்ட அறுபதாயிரம் (60,000) கையடக்க மற்றும் சாதாரண தொலைபேசிகளுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது சைரனுடன் கூடிய தனித்துவமான “ரிங் டோன்” அறிவிப்பின் வடிவத்தில் முன்கூட்டிய எச்சரிக்கையை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர் முன் எச்சரிக்கை அமைப்பு, பேரிடர் மேலாண்மை மையம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் SLT Mobitel, Hutch, Dialog மற்றும் Airtel உள்ளிட்ட முக்கிய தொலைபேசி சேவை வழங்குநர்களின் கூட்டு முயற்சியாகவே இது அமைத்துள்ளது.
இந்த மூலோபாய முயற்சியை முறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.