அதிபர் நியமனங்கள் உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அமையும்!

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்திக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச சுற்று நிரூபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக அமைந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, வடக்கு மாகாணத்தில் புதிதாக அதிபர் நியமனம் பெற்றுக் கொண்டவர்களுள் ஒரு பகுதியினர் இன்று (21.12) சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிதாக அதிபர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் வெளி மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக வெளி மாவட்டங்களில் கடமையாற்றி இருப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைப்பதுடன், தம்மை சொந்த மாவட்டங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிபர்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் கேட்டறிந்த அமைச்சர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன், நியமனங்கள் அனைத்தும் நியாயமானதாகவும் சுற்று நிரூபங்களுக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மேலும், மனிதாபிமான காரணங்களையும் பரிசீலிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version