மக்களின் சிந்தனைகளில் ஆரோக்கியமான மாற்றத்தினை ஏற்படுத்தி செழிப்பான எதிர்காலத்திற்கான வழியினை உருவாக்கும் ஆண்டாக புதிய ஆண்டு அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. அரசியல் அபிலாசைகளை பெற்று சகல வளங்களையும் கொண்டவர்கர்களாக இந்த நாட்டிலே வாழுகின்ற சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையோடு எத்தனையோ வருடங்களை எமது மக்கள் கடந்திருக்கின்ற போதிலும், அந்த நம்பிக்கைகள் இதுவரை பூரணமாக்கப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருக்கின்றது.
எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூரணமாகாமல் இருப்பதற்கு பிரதான காரணம், எமது தரப்பில் இருக்கின்ற பலவீனங்களும் குறுகிய நோக்கங்களை கொண்ட சுயநல சிந்தனைகளுமே, என்ற யாதார்த்தத்தினை எமது மககளில் கணிசமானவர்கள் விளங்கிக் கொள்ளாமையேயாகும்.
எமது மக்களின் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறுமாக இருந்தால், தங்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று அஞ்சுகின்ற சுயநல தமிழ் அரசியல் தரப்புக்கள், தென்னிலங்கை தொடர்பான நம்பிக்கையீனங்களை அதிகரிப்பதிலும், உருவாகின்ற பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அணுகாமல் வீரியமாக்கம் வகையிலும் அணுகுவதையும் தங்களின் அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் எமது அணுகுமுறை என்பது வித்தியாசமானது.
எமக்கு கிடைக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையும் வளங்களையும் பயன்படுத்தி எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதுடன், அபிவிருத்தி திட்டங்களை முடிந்தளவு முன்னெடுப்பதன் மூலம் எமது மக்களின் வாழ்வியலைப் பாதுகாக்கின்ற சமகாலத்தில், இருப்பதை பாதுகாத்துக் கொண்டு அரசியல் அபிலாசைகளை முன்நோக்கி நகர்த்துகின்ற தந்திரோபாய நகர்வுகளையும் முன்னெடுப்பதாகும்.
ஆனால் எமது தந்திரோபாய முயற்சிகளை கணிசமானளவு மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளாத நிலையில், சுயநலக் கோஷங்களோடு வீதியுலா வருகினறவர்களின் கைளில் அதிகாரங்களை வழங்கி வருகின்றார்கள். அந்த அதிகாரங்கள் விழலுக்க இறைத்த நீராகவே தொடர்ந்தும் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்நிலையிலேயே, எதிர்கொண்டுள்ள புதிய ஆண்டு தேர்தல் ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
எனவே, புதிய ஆண்டில் எமது மக்களின் சிந்தனைகள் புதிய மெருகினை அடைய வேண்டும். வெறுமனே உணர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு மயங்காமல், அறிவு ரீதியாக சிந்தித்து, இந்த நாட்டிலே எமது மக்கள் கௌரவமாக வாழ வேண்டும் என்பதற்காக உண்மையுடன் உழைப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலான சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.